மும்பை:
மாட்டிறைச்சி தடை விவாகரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து என் வேலையை இழக்க விரும்பவில்லை என இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாட்டிறைச்சி சாப்பிடும் விவகாரம் இந்தியாவில் தேசியப் பிரச்சினையாக கடந்தாண்டில் உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து மாட்டிறைச்சி சர்ச்சைகள் அவ்வப்பொழுது தொடர்ந்து தலையெடுத்து வருகின்றன.
இந்நிலையில் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் மும்பை பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது அவருடன் மாணவர்களின் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற்றது. அப்போது ஒரு மாணவர் குறுக்கிட்டு “ மாட்டிறைச்சி தடை விவகாரத்தால் விவசாயிகளின் வருமானம் அல்லது ஊரக வருமானத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதா?” என்று மாணவர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன், “ இந்தக் கேள்விக்கு நான் பதிலளித்தால் என் வேலை பறிபோகும் என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். இருந்தும் இந்த கேள்வி எழுப்பியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.
இதேபோல் 2014 இல் பெங்களூரூவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அர்விந்த் சுப்பிரமணியன், “ சமூக பிளவுகளுக்கும் ஏற்ற தாழ்வுகளுக்கும் எதிர்வினை ஆற்றத் தொடங்கினால், அது பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு இந்தியா ஒரு ஆச்சரியமான எடுத்துக்காட்டு. இடஒதுக்கீட்டால் என்ன கிடைத்தது, எவற்றை இழந்தோம், மதங்களால் என்ன கிடைத்தது, என்ன கிடைக்கவில்லை இவை போன்ற பொதுவான சில கொள்கைகளையும் கோட்பாடுகளையும் தோலுரித்துக் காட்டத் தொடங்கினால் அது பல்வேறு தளங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.