அமராவதி: ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக ரயில்வே அவசர தொலைபேசி எண்களை வெளியிட்டு உள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது. இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இரு ரயில்களும் மோதிக்கொண்ட விபத்தில், பெட்டிகளின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பலர் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தை எடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளான இடம் இருள் சூழ்ந்த காணப்படட்டது. ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே பணியாளர்கள், போலீசார் மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்துக்குள்ளான இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்துள்ளன. விசாகப்பட்டினம் அனகப்பள்ளி மாவட்டங்களில் இருந்து தேவையான அளவு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பவும், ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்டுப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும், அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளை செய்யவும் முதல்வர் உத்தரவு ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளார்.
ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கண்டகப்பள்ளியில் சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணி ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தற்போது ஆந்திராவில் தற்போது நிகழ்ந்த ரயில் விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்த ரயில் விபத்தில் சிக்கிக் கொண்டுள்ள தங்களின் உறவினர்களைப் பற்றி தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
BSNL 08912746330, 08912744619
Airtel – 8106053051, 8106053052
BSNL – 8500041670, 8500041671