சென்னை: ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இன்று (அக்.26) சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. திமுக அரசின் பல்வேறு கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி மறுத்து வருகிறார். சமீபத்தில் கம்யூனிஸ்டு தலைவர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் அனுமதி மறுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்து. இந்த நிலையில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ”ஆளுநர் மாளிகையே… அடக்கிடு வாயை…” என அவர் கொடுத்த அறிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இந்த சலசலப்புக்கு இடையே நேற்று (அக்டோபர் 25ந்தேதி) ஆளுநர் மாளிகை வாசலில் ரவுடி கருக்கா வினோத் திடீரென பெட்ரோல் குண்டுகளை வீசினார். அது ஆளுநர் மாளிகை நுழைவாயில் (எண் 1) முன்பு போடப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் முன் விழுந்து வெடித்து சிதறி லேசாக தீப்பற்றியது.
இதைக் கண்டு அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார் விரைந்து வந்துஇ, தப்பி ஓட முயன்ற இளைஞரை விரட்டிப் பிடித்தனர். அப்போது, அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டில் ஒன்று விழுந்து உடைந்தது. இதையடுத்து, அவர் மறைத்து வைத்திருந்த மேலும் 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கிண்டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையில், பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் என்று என்பது தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று குடியரசு தலைவர் முர்மு சென்னை வர உள்ள நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்துப் பேசினார். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆளுநரிடம் காவல் ஆணையர் எடுத்துக் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இன்று தமிழக வரும் குடியரசுத் தலைவர் இரவு ஆளுநர் மாளிகையில் தங்க உள்ள நிலையில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இந்த சந்திப்பின் போது, காவல் ஆணையர் பேசியதாக கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகை மற்றும் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறும் இடம் வரை எந்த மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.