டில்லி

ரும் 25 ஆம் தேதி அன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குழு அடுத்தகட்ட ஆலோசனை நடத்த உள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்வைத்து நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்துத் திட்டமிட்டு வருகிறது.  இத்தகைய நடைமுறையால் ஏராளமான நிதி மற்றும் வளங்கள் மிச்சப்படுவதால் இதைச் செயல்படுத்துவது அவசியம் எனப் பிரதமர் மோடியும் கூறி இருந்தார்.

கடந்த மாதம் 2 ஆம் தேதி இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு முடிவு செய்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. டில்லியில் கடந்த மாதம் 23-ம் தேதி முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டுவருவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்துக்கேட்பது என முடிவு செய்யப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு வரும் 25 ஆம் தேதி  அடுத்தகட்ட ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சட்டத் திருத்தங்களை இந்தக் குழு பரிந்துரைக்க உள்ளது.