பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கை 3 மாதங்களில் முடிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், அந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில துணை முதல்வராக சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே பல்வேறு முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உள்ளன. இதுதொடர்பைக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை பல முறை சோதனைகளை நடத்தி உள்ளது. ஏற்கனவே இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணையை துவங்கி நடத்தி வருகிறது. அதுபோல 2020ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், தன்மீதான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த மனுமீதான விசாரணையைத் தொடர்ந்து, டி.கே.சிவகுமார் தொடர்ந்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் சிபிஐ 3 மாதத்தில் விசாரணையை நிறைவு செய்யவும் , ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியும் கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் கர்நாடகா துணை முதல்வர் டி.கே., சிவக்குமாருக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன