அமராவதி: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளத. அதன்படி, நவம்பர் 15ந்தேதி ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும்பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் நலத் துறை அமைச்சா் சி. ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா , தாழ்த்தப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் வரிசையில் பின்தங்கிய சாதிகளை மேம்படுத்துவதை எங்கள் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பிசி வகுப்பினரின் நீண்டகால ஆசை.
ஏற்கனவே 1872 -ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியது, 1901 -ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்பட இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் 30 சதவிகிதம் பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டதாக தெரிவித்தமார்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் 139 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த ஜாதிகள் உள்ளன. இந்தச் சமூகங்களின் மக்கள்தொகை குறித்த விவரங்கள் இல்லை.
நாடு முழுவதும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து மேற்கொள்ள வலியுறுத்தி மாநில சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பப்பட்டது. ஆனால், இத்தகைய கணக்கெடுப்பு நடைபெற சாத்தியமில்லை என்ற நிலையில், மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முன்வந்துள்ளது.
சமூக-பொருளாதார நிலை உள்ளிட்ட அளவீடுகளைப் பயன்படுத்தி பிராந்திய ரீதியாகவும், வேறு பிற முறைகளிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான விரிவான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மாநில அரசு தீா்மானித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பு நடத்துவதற்காக ஒரு சிறப்பு செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாகப்பட்டினம், ராஜமகேந்திராவரம், விஜயவாடா, கர்னூல் மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் இது தொடர்பாக அனைத்து சாதி தலைவர்கள் மற்றும் தலைவர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறுவதற்காக பிராந்திய கூட்டங்களையும் அரசாங்கம் நடத்த உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து சாதி தலைவர்களிடமிருந்தும் ஆலோசனைகளை பெற தனி மின்னஞ்சல் ஐடி இறுதி செய்யப்படும் என்றார்.
இந்த சாதிவாரி கணக்கெடுப்பு வரும் நவ.15-ஆம் தேதியிலிருந்து தொடங்கும் இந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கெடுப்பில், தன்னாா்வ அமைப்புடன் இணைந்து கிராம செயலக அமைப்பும் முழுமையாக ஈடுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.