Maria-Sharapova-589166
 
டென்னிஸ் உலகின் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை மரியா ஷரபோவா ஓர் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளார், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்கான போதைப்பொருள் பரிசோதனையொன்றின்போது, அவரது உடலில் தடை செய்யப்பட்ட மருந்துப்பொருள்  ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவக் காரணங்களுக்காகக் கடந்த 10 ஆண்டுகளாகத் தான் உட்கொண்டுவந்த ஒரு மருந்தினால்தான் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டதாகச் சொல்கிறார் மரியா.
ரஷ்யாவைச் சேர்ந்த 28 வயது மரியா, ஐந்துமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர், அவரது உடலில் மெல்டோனியம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மருந்து டயாபடீஸ் மற்றும் மக்னீசியம் குறைவைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி 1ம்தேதிதான் போதைப்பொருள்களுக்கு எதிரான சர்வதேச அமைப்பு இந்தப் பொருளைத் தடை செய்தது.
“நான் செய்தது மிகப் பெரிய தவறு” என்று கண்ணீருடன் சொல்கிறார் ஷரபோவா, “என்னுடைய ரசிகர்களை நான் ஏமாற்றிவிட்டேன், நான்கு வயதிலிருந்து டென்னிஸை விரும்பி விளையாடிவருகிறேன், அந்த விளையாட்டுக்கும் நான் துரோகம் செய்துவிட்டதாக உணர்கிறேன்!”
இதுகுறித்து லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய மரியா ஷரபோவா, “இதன் பின்விளைவுகளை நான் சந்திக்கவேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய விளையாட்டு வாழ்க்கை இப்படியோர் அசிங்கமானவகையில் முடிவுக்குவருவதை நான் விரும்பவில்லை, எனக்கு டென்னிஸ் விளையாட இன்னொரு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
434822-sharapova-afp
முன்னதாக, மரியா ஷரபோவா ஒரு “முக்கிய அறிவிப்பை” வெளியிடுவார் என்று அவருடைய மேலாண்மைக்குழுவினர் அறிவித்திருந்தார்கள். அப்போது, அவர் தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வுபெறப்போகிறார் என்றுதான் பலரும் சொல்லிவந்தார்கள், இப்படியோர் அதிர்ச்சியை அவர்களும் எதிர்பார்க்கவில்லை.
சமீபகாலமாகவே ஷரபோவா பல காயங்களைச் சந்தித்துத் தடுமாறிக்கொண்டிருந்தார். ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதியில் செரீனா வில்லியம்ஸிடம் தோற்றபிறகு, அவர் எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளவில்லை.
“2006ல்தான் எனக்கு முதன்முறையாக இந்த மருந்து தரப்பட்டது” என்கிறார் மரியா, “அப்போது எனக்குப் பல உடல்நலப் பிரச்னைகள் இருந்தன. அடிக்கடி உடம்பு சரியில்லாமல்போனது, என் உடலில் மக்னீசியம் குறைந்திருந்ததாலும், என்னுடைய குடும்பத்தினருக்கு டயாபடீஸ் வந்திருந்ததாலும், என்னிடமும் டயாபடீஸ் அறிகுறிகள் காணப்பட்டதாலும், எனக்கு இந்த மருந்து உள்ளிட்ட பல மருந்துகளைத் தந்தார்கள். அதனால், இப்படியொரு பிரச்னையில் சிக்கிக்கொண்டுவிட்டேன்.”  என்று கண்ணீர் விடுகிறார் மரியா.