பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவால் அனுப்பப்பட்டு, சென்றுகொண்டிருக்கும் ஆதித்யா எல் 1 விண்கலம் பூமி, சந்திரன் தொடர்பானபுகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது. அதை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலத்தை 2023ம் ஆண்டு, செப்டம்பர் 2ஆம் தேதி, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த விண்கலம், சுமார் 125 நாட்கள் பயணித்து சூரியனை நோக்கி பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
தற்போது ஆதித்யா விண்கலமானது, நிலவை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலத்தை விட 4 மடங்கு அதிக தூரத்தை கடந்து பயணித்து வருகிறது. இந்த நிலையில், ஆதித்யா1 விண்கலம், அந்த பகுதியில் ஆய்வுகளை நடத்தி, அதுதொடர்பான புகைப்படங்களை அனுப்பி உள்ளது. அதில், பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியுள்ளது.
இது தொடர்பான வீடியோவை இஸ்ரோ தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “சூரியன், பூமிக்கு இடையேயான L1 புள்ளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆதித்யா எல்1 விண்கலம், செல்பியையும் பூமி மற்றும் நிலவின் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளது” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மேற்கொள்ள உள்ள ஆய்வுகள் என்னென்ன?
பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் ஆதித்யா எல்1 விண்கலத்தில் பொருத்தப்பட்டு உள்ளன. இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய உள்ளது.
சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய இதில் விஇஎல்சி (Visible Emission Line Coronagraph) என்ற தொலைநோக்கி, எஸ்யுஐடி ( Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ளன.