கோயம்புத்தூர்
ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டு அவருக்கு எதிராக நேரடியாக திமுக போட்டியிட்டால் தாம் ஆதரிக்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
இன்று கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒஉர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
அப்போது சீமான் செய்தியாளர்களிடம்,
”கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. அதாவது 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குத்தான் பெரும்பாலும் ஒதுக்கியது. திமுக தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டது ஒரு விதிவிலக்காக அமைந்துவிட்டது.
வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக கூறுகின்றனர். பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் திமுக பிரதமர் மோடிக்கு எதிராக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது.
நாம் தமிழர் கட்சி பிரதமர் மோடியை எதிர்த்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
எங்களுக்கு திமுக, அதிமுகவுடன் எங்களுக்கு இருப்பது பங்காளி சண்டை. இந்த சண்டையில் தலையிட பாஜக யார்? பாஜக நாட்டை ஏற்கனவே பிச்சைக்கார நாடாக வைத்திருப்பது போல் இனி தமிழ்நாட்டையும் அப்படி மாற்றப் போகிறதா? இங்கு பாஜகவுக்கு என்ன வேலை இருக்கிறது?
வெறுப்பு அரசியலை மட்டுமே பாஜக பேசுகிறது. இஸ்லாமியர், கிறிஸ்தவரை மட்டுமே எதிர்த்துப் பேசுவது என்பது விருப்ப அரசியலா என்ன? வெறுப்பு அரசியல்தானே. எப்போதும் நான் வெறுப்பு அரசியலைப் பேசுகிறவன் அல்ல. மாறாகத் தேசிய இனத்தின் உரிமைக்காக, தெளிவான புரிதலோடு நிற்கிறவன்’.
என்று தெரிவித்துள்ளார்.