சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு, சென்னையில் உள்ள கால்வாய் மற்றும் நீர் நிலைகளில் தூர் வாரும் பணியை முடிக்க மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
சென்னையில் 23 நீர் நிலைகள் உள்ளன. மேலும், சென்னை முழுவதும் பங்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு பாய்ந்தோடுகிறது. இந்த பகுதிகளில் பொதுமக்கள், குப்பைக் கூளங்களை கொட்டுவதால், அவைகள் மாசடைந்து, நீர் போக முடியாமல் சேரும், சகதியுமாக மாறியும், ஆகாய தாமரைகள் போன்ற செடிகள் பரவியும் நோய்களை பரப்பி வருகின்றன. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. சாலைகளில் நீர் தேங்குவதால், வாகன நெரிசல் உள்பட பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுவாக தமிழ்நாட்டில், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான தென் மேற்கு பருவமழை காலம் விலகுவதற்கான சூழல் தற்போது நிலவி வருவதாக கூறப்படுகிறது. தென் மேற்கு பருவமழை காலம் நிறைவு பெற்ற பிறகு, அடுத்ததாக வடகிழக்கு பருவமழை தொடங்கும். அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் இந்த பருவமழை காலத்தில்தான் தமிழகம் உள்பட தென் இந்திய பகுதிகளில் சில இடங்களுக்கு அதிகளவு மழை கிடைக்கும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை அனைத்து தரப்பினராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்காலங்களில் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு, சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணிகைள் மேற்கொண்டு வருகிறது. இதுவரை 80 சதவிகித பணிகள் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகளையும் முடிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக அவ்வப்போது முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டு வருகிறது.
இதற்கிடையில், சென்னை மாநகராட்சி மூலம், சென்னையில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்களில் சேரு, சகதி மற்றும் ஆகாய தாமரைகள் போன்றவை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 30% பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் நடுப்பகுதிக்குள் முடிக்கத் துறை திட்டமிட்டுள்ளது. விருகம்பாக்கம், அரும்பாக்கம், ஓட்டேரி நுால், பக்கிங்காம் கால்வாய் ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்களில் செடிகொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நீர்நிலைகள் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை ஆண்டுதோறும் முடிக்க நீர்வளத்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னையில் உள்ள ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர் வழிக்கால்வாய்கள் போன்ற நீர் நிலைகளில் 23 நீர் நிலைகளில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய 3 மாதங்களில் பருவ மழை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு தூர்வாரும் பணிகளின் மூலம் 4.775 மெட்ரிக் டன் அளவிலான வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நீர் வரத்துக் கால்வாய்கள் செல்லும் முக்கிய சாலைகளில் பல்வேறு இடங்களில் குறுக்குப் பாலங்கள் உள்ளன.
குறிப்பாக மாம்பலம் கால்வாய் செல்லும் தியாகராயநகர், ஜி.என்.ரெட்டி சாலை, விஜயராகவா சாலை, சர்பிட்டி தியாகராயர் சாலை, வெங்கட் நாராயணா சாலை, மூப்பாரப்பன் தெரு, சி.ஐ.டி. நகர் 4-வது பிரதான சாலை, தெற்கு உஸ்மான் சாலை, சி.ஐ.டி. நகர் வடக்கு சாலை ஆகிய இடங்களில் உள்ள குறுக்குப் பாலங்களின் கீழ்ப் பகுதிகளில் நவீன எந்திரங்களை கொண்டு வண்டல்கள் தூர்வாரி அகற்றப்பட்டு உள்ளன.
வண்டல்கள் அகற்றப்பட்ட நீர் நிலைகளும், கழிவுகளின் அளவும் வருமாறு:-
அடையாறு-250, மெட்ரிக் டன், வடக்கு பக்கிங்காம் கால்வாய்-790 மெட்ரிக் டன், கேப்டன் காட்டன் கால்வாய்-120 மெட்ரிக் டன், இணைப்பு கால்வாய்-75 மெட்ரிக் டன், கூவம் ஆறு-105 மெட்ரிக் டன், பள்ளிக்கரணை சதுப்பு நிலம்-430 மெட்ரிக் டன், ஆதம்பாக்கம் ஏரி-130 மெட்ரிக் டன், எண்ணூர் குளம்-80 மெட்ரிக் டன், கூவம் ஆறு எம்.எம்.சி. எதிரில்-120 மெட்ரிக் டன், அரிதாஸ் தாமரைக்குளம்-55 மெட்ரிக் டன், தரமணி ஏரி-350 மெட்ரிக் டன், தட்டான்குப்பம் கால்வாய்-40 மெட்ரிக் டன், பெரியதோப்பு ஏரி-45 மெட்ரிக் டன், கொடுங்கையூர் இணைப்பு கால்வாய்-40 மெட்ரிக் டன், விருகம்பாக்கம் கால்வாய்-180 மெட்ரிக் டன், வடக்கு அவென்யூ கால்வாய்-40 மெட்ரிக் டன், பாடிக்குப்பம் கால்வாய்-160 மெட்ரிக் டன், ஓட்டேரி கால்வாய்-130 மெட்ரிக் டன், ஏகாங்கிபுரம் கால்வாய்-140 மெட்ரிக் டன், மாம்பலம் கால்வாய்-750 மெட்ரிக் டன், டிரஸ்ட்புரம் கால்வாய்-150 மெட்ரிக் டன், நந்தம்பாக்கம் கால்வாய்-135 மெட்ரிக் டன் என மொத்தம் 4,775 மெட்ரிக் டன் வண்டல்கள் அகற்றபட்டது. தூர் வாரும் பணிகளை பருவ மழைக்கு முன்னதாக முடிக்கும் வகையில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.