சென்னை: தமிழகம் முழுவதும் காவல்துறையில் 750 உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் மொழித்தேர்வு நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு காவல்துறையில் நிரப்பப்பட உள்ள 750 காவல் துணை ஆய்வாளர் பதவி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) வெளியிட்டது. அதன்படி, 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மொத்த காலியிடங்கள்: 750 பணி: SI of Police (Taluk) – 366 பணி: SI of Police (AR) – 145 பணி: SI of Police (TSP) – 110 பணி: Station Officer – 129. இதில் 191 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு எழுத தகுதியாக, தேர்வர்கள், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயதுவரம்பு: 1.7.2023 தேதியின் அடிப்படையில் 20 – 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.
மேலும், விண்ணப்பிப்பவர்களுக்கு எழுத்துத்தேர்வு, உடல் தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, சிறப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து எஸ்ஐ தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (26-08-23) மாநிலம் முழுவதும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக தேர்வர்கள் காலை 8.30 மணிக்கே வரவழைக்கப்பட்ட நிலையில், அவர்களின் ஹால் டிக்கெட் உள்பட பலத்த சோதனை களுக்கு பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், தேர்வர்கள் மின்னணு சாதனங்களை தேர்வறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. பலத்த பாதுகாப்புடன் தேர்வு நடைபெற்று வருகிறது.