சென்னை

போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களைத் தவிர்க்கச் சென்னையில் தண்ணீர் லாரிகளுக்கு காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

சென்னை நகரின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பணிகள் நடக்கிறது. ஆகவே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  மேலும் தண்ணீர் லாரிகளால் அதிகம் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கின்றன.

சென்ற வாரம், சென்னை கோவிலம்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி, தனது தாய் கண் எதிரேயே பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது

எனவே தண்ணீர் லாரிகள் சென்னைக்குள் வருவதற்கு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நேரக்கட்டுப்பாடுகளை போக்குவரத்து காவல்துறையினர் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள்  நேற்ற் முன்தினம் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள்.

அப்போது ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள காலை 7 மணிமுதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தண்ணீர் லாரிகளை சென்னை நகருக்குள் அனுமதிக்கக்கூடாது என்பதை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நேற்று வடசென்னை பகுதியில் மேற்கண்ட நேரக்கட்டுப்பாட்டை மீறி வந்த தண்ணீர் லாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வருவதற்கு இதுபோன்ற நேரக் கட்டுப்பாடுகள் செயல்பாட்டில் உள்ளது என்றும், அதையும் தீவிரமாக செயல்படுத்தவும் போக்குவரத்து காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.