சென்னை: தமிழக உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தமிழக அரசின் உள்துறை செயலாளர் அமுதா இந்த இடமாற்ற உத்தரவை பிறப்பித்திருந்தார். திமுக அரசுக்கு நம்பிக்கையான அதிகாரிகளில் ஒருவரான ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், தனது பணிமாற்றம் குறித்து, ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில் மறைமுகமாக அதிருப்தி தெரிவித்து உள்ளார்.
மாணவி ஸ்ரீமதி விவகாரம் தொடங்கி, அமலாக்கத்துறை ரெய்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரங்கள் தமிழ்நாடு அரசுகுகு தலைகுனைவை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த விஷயங்களில், தமிழக உளவுத்துறை தோல்வி அடைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனால், உளவுத்துறை ஏடிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது முதலமைச்சர் ஸ்டாலின் அதிருப்தி அடைந்த நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக உளவுத்துறை ஏடிஜிபி பொறுப்பை டாக்டர் செந்தில் வேலன் ஐபிஎஸ் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. மேலும், டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை தலைமையக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், டேவிட்சன் தேவாசீர்வாதம் தனது சமூக வலைதள பக்கத்தில், பதிவிட்டு உள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவரது, பதிவில், “மோசமான தலைவர்கள் எல்லா நேரத்திலும் கட்டுப்பாடுகளை முன்னிறுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என நம்புவார்கள். தொடர்ந்து தன்னை பின் தொடர்ந்து அவர்களை கட்டுப்படுத்தி வைப்பதற்காக அடிக்கடி ஆய்வுகள் மற்றும் கூட்டங்கள் நடத்தி கட்டுப்படுத்த முயல்வார்களே தவிர அதற்கு மேல் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட தலைவர்கள் ஒட்டுமொத்த அமைப்பை பலவீனமாக மற்றும் பாதிக்கப்படக் கூடிய அளவிற்கு செய்வார்கள்.
ஒரு தலைவர் தான் நடத்தும் கூட்டங்களை எப்படி சிறிய அளவிலும், இனிமையாகவும் நடத்த வேண்டும் எனத் தெரியாவிட்டால் அவர் வெறும் திறன் இல்லாத மற்றும் பலவீனமானவர் என்பதை தவிர எதுவும் இல்லை” என பதிவிட்டு உள்ளார்.
அவரது இந்த பதிவானது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவு தமிழ்நாடு முதல்வரை குறிப்பிட்டு கூறியுள்ளரா, காவல்துறை உயரதிகாரியை குறை கூறி உள்ளரா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
காவல்துறை தலைமையக ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் வெளியிட்டுள்ள இந்த பதிவு காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழ்நாடு அரசு வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.