ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X சமூக ஊடகத் தளத்தில் இருந்த பிளாக் செய்யும் அம்சம் நீக்கப்படுவதாக அதன் உரிமையாளர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.

பதிவுகளுக்காக துன்புறுத்தப்படுவதையும் மற்றும் ஸ்பேம் இடுகைகளைத் தவிர்ப்பதற்குமான முக்கிய அம்சமாக இருந்து வருகிறது பிளாக் அம்சம்.

“யாரையாவது முடக்குவதற்கு எதிராக எப்போதாவது ஏதாவது காரணம் உள்ளதா?” என்று கேள்வியுழுப்பியுள்ள எலோன் மஸ்க், “இதில் எந்த அர்த்தமும் இல்லை. DMகள் தவிர, பிளாக் ஒரு ‘அம்சமாக’ நீக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள சிலர், “பயனர்களைத் தடுக்கும் திறனை எக்ஸ் அகற்றினால், ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோரின் கொள்கைகளை மீறுவதாக அமையும். இது இந்த இயங்குதளங்களில் இருந்து எக்ஸ் அகற்றப்படுவதற்கு வழிவகுக்கும்” என்று கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு $44 பில்லியனுக்கு சமூக ஊடக தளத்தை வாங்கியதில் இருந்து, மஸ்க் ட்விட்டரில் இருந்து X என பெயரை மாற்றுவது மற்றும் அதன் லோகோவை ஒரு பறவையிலிருந்து “X” க்கு மாற்றுவது உட்பட பல மாற்றங்களை அதிரடியாக செய்து வருகிறார்.

இந்த நிலையில் X ல் இருந்து பிளாக் செய்யும் அம்சத்தை நீக்குவது குறித்து எலோன் மஸ்க் அறிவித்துள்ளபோதும் எப்போது செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கவில்லை.