குவிட்டோ
ஈகுவடார் நாட்டின் தேர்தல் பிரசாரத்தின் போது அதிபர் வேட்பாளர் பெர்னண்டோ விலாவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஈகுவடார் நாடு தென்னமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த நாடு போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்குப் பெயர் பெற்றதாகவும் உள்ளது. இந்த நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார்.
விரைவில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், இதில் போட்டியிட்டு வெற்றி பெற பெர்னாண்டோ விலாவிசென்சியோ என்பவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று, தலைநகர் குவிட்டோவில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அங்கு ஒருவர் திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
உடலில் குண்டுகள் பாய்ந்ததில் பெர்னாண்டோ விலாவிசென்சியோ உயிரிழந்தார். அதிபர் வேட்பாளராகப் போட்டியிட இருந்த பெர்னாண்டோ விலாவிசென்சியோ துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெர்னாண்டோ விலாவிசென்சியோவை சுட்டுக்கொலை செய்தது யார்? இதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு விசாரணை அமைப்பு விசாரணை தொடங்கி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி ஈகுவடார் நாட்டின் தற்போதைய அதிபர் கில்லர்மோ லாஸ்ஸோ “இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தண்டிக்காமல் விடமாட்டேன். அவர்களுக்குச் சட்டத்தின் பலம் முழுவதுமாக காட்டப்படும்” என்றார்.