சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நள்ளிரவு வரை விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் மீண்டும் விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து  தீர்ப்பளித்தது.

இதை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்  நேற்று மாலையே (ஜூலை 7ந்தேதி) மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இணையதள நகலை அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்கும் நாட்களில், ஒரு நாளைக்கு இருமுறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமலாக்கத் துறை தரப்பு வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறை கவனித்துக் கொள்ளும் என தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அமலாக்கத் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று இரவு 9.10 மணிக்கு புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள்,  சாஸ்திரி பவனுக்கு அழைத்துச்சென்றனர்,. அங்குள்ள 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  செந்தில் பாலாஜியிடம் விசாரணையை தொடங்கினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த ஆவணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாராக வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 50 கேள்விகள் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி அவரது தரப்பு பதிலை பதிவு செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். . நள்ளிரவு 1மணி வரை விசாரணை  விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று மீண்டும் விசாரணை தொடர்லகிறது.

அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல தயார் நிலையில் ஆம்புலன்சும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.. மேலும், சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்