சென்னை
நேற்று இரவு அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சாஸ்திரி பவன் அழைத்துச் சென்று அங்கு விடிய விடிய விசாரணை நடத்தி உள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்ப அனுமதி கோரி சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி முன்னிறுத்தப்பட்டார். நீதிபதி, உச்சநீதிமன்றம் 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதித்துள்ள நிலையில் இதுதொடர்பாக வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்து வருகிற 12-ந் தேதி வரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.
நேற்று மாலை உத்தரவு நகலை அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு மாலை 6 மணிக்கு அவர்கள் சென்னை புழல் சிறைக்கு வாகனத்தில் சென்றனர். செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்து வரும்போது ஏதேனும் அசம்பாவிதம் சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய காவல் படையினர் மற்றொரு வாகனத்தில் அவர்களுடன் சென்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் புழல் மத்தியச் சிறை அதிகாரிகளிடம், நீதிமன்ற உத்தரவு நகலை கொடுத்தனர். ஆயினும் அதிகாரப்பூர்வமாக இ-மெயில் மூலம் செசன்ஸ் நீதிமன்றத்தில் இருந்து தங்களுக்கு உத்தரவு நகல் கிடைக்கவில்லை என சிறைத்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 6 மணியில் இருந்து சிறையில் காத்திருந்து இரவு 8.30 மணிக்கு செந்தில் பாலாஜியை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் காரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனுக்கு அழைத்து வந்தனர்
தாடி வைத்திருந்த செந்தில் பாலாஜி இரவு 9.10 மணிக்கு சாஸ்திரி பவனுக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். விசாரணை விடிய விடிய நடைபெற்றது.
அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தைச் சுற்றிலும் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல தயார் நிலையில் ஆம்புலன்சும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.