புதுக்கோட்டை:
ருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவரது மனைவியும் வரும் 29ஆம் தேதி நேரில் ஆஜராக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக கூறி, வருமான வரித்துறை கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான 206கோடியே 42லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை வசூலிக்கும் வகையில், புதுக்கோட்டையில் உள்ள அவரது நிலங்களை முடக்கியும், மூன்று வங்கிக் கணக்குகளை முடக்கியும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது.

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி ரம்யா மீதும், கடந்த மே மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் வரும் 29ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,