‘டெல்லி: உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக செயல்பட மக்களவை செயலகம் அனுமதி வழங்கி உள்ளது. ராகுல் மார்ச் 2023 இல் கீழ் சபையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவரது பதவி உச்சநீதிமன்ற தீர்ப்பால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மோடி பெயர் குறித்து அவதூறு பேசிய குஜராத் பாஜக எம்.ல்.ஏ தொடர்ந்த வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ராகுலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 ஆண்டு கால சிறை தண்டனைக்க இடைக்கால தடை விதித்தது. அதனால், அவரது எம்.பி. பதவி மீண்டும் உயிர்ப்பெற்றது. இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை ஆய்வு செய்த சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல்காந்தி மீண்டும் எம்.பி.யாக தொடர அனுமதி வழங்கினார். இதுதொடர்பாக மக்களவை செயலகமும் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராகுல் காந்தியின் எம்.பி பதவி மீட்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மேளதாளத்துடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தார். நாடு முழுவதும் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.