சென்னை

மிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னெடுப்புகளைத் தொடங்கி உள்ளன. ஒவ்வொரு கட்சியும் மாவட்ட அளவில் கட்சியைப் பலப்படுத்தும் பணியிலும் முனைப்பு காட்டி வருகின்றன.

அவ்வகையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மக்கள் சார்ந்த போராட்டங்களை முன்னெடுத்து களப்பணியைத் தொடங்கி உள்ளது. மேலும் பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை பிரசார நடைப்பயணத்தைத் தொடங்கி உள்ளார்.

தமிழகத்தின் ஆளும்கட்சியான தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் ஆரம்பக் கட்ட பணிகளைத் தொடங்கி உள்ளது. கடந்த 2 ஆண்டுக் கால தி.மு.க. அரசின் சாதனைகளை முன் நிறுத்தி மக்களை சந்திக்க தி.மு.க. தயாராகி வருகிறது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா மூலமாக தி.மு.க. அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் பிரசார வியூகம் அமைக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தலை தி.மு.க. வழங்கியுள்ள நிலையில் தற்போது தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்குக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இன்று காலை 10.30 மணி அளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

கூட்டத்தில் மாவட்டம் வாரியாக கட்சியின் வளர்ச்சி பணிகள், உறுப்பினர் சேர்க்கை, கள நிலவரம், தி.மு.க. அரசின் திட்டங்களுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசப்பட உள்ளது.