புதுடெல்லி:
குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
கடந்த வாரம் ‘இந்தியா’ கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்று வந்தனர். அவர்கள் அங்குள்ள நிலவரத்தை ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடம் எடுத்துரைத்தனர். தற்போது இப்பிரச்சினையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் தலையீட்டை இந்தியா கூட்டணி கோரியுள்ளது.
எனவே ’இந்தியா’ கூட்டணி சார்பில் முறையிட நேரம் ஒதுக்கக்கோரி, குடியரசுத் தலைவருக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதி உள்ளார். இதையொட்டி எதிர்க்கட்சி தலைவர்களை இன்று காலை 11.30 மணிக்குச் சந்திக்க குடியரசுத் தலைவர் நேரம் ஒதுக்கியிருந்தார்.
குடியரசு தலைவரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், குடியரசு தலைவருடன் சந்திப்பு மனநிறைவாக இல்லை. மணிப்பூர் விவகாரம் குறித்து குடியரசு தலைவர் எந்த உறுதியும் அளிக்கவில்லை என்றும் எங்கள் கோரிக்கையை பொறுமையாக கேட்டு கொண்ட குடியரசு தலைவர், தலையசைந்து விடைபெற்றார் என்று கூறினார்.