மதுரை: சிவகங்கை பகுதிகளில் நள்ளிரவில் 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தப்பட்டள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை அருகே உள்ள இடத்தின் உரிமம் தொடர்பாக, சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், அவரது மருமகளுக்கம் இடையே பிரச்சினைகள் இரு வருகிறது. இந்த இடத்தை கையக்கப்படுத்த இரு தரப்பினரும் தங்களது சொந்த பந்தங்கள் மூலம் போராடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பலமுறை கைகலப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருதரப்பினரும் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டையை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு சமாதானப்படுத்தினர். ஆனால், அதற்கு அவர்கள் அடங்காத நிலையில், நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்த இட பிரச்சினையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகேயுள்ள மகாமுனி என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் நள்ளிரவில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கிடந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன. அதே வேளையில், கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. தொடர்ந்து, அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஒரே நேரத்தில் 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய தகவலின் பேரில் விரைந்து வந்த சிவகங்கை திருப்புவனம் போலீசார், விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மாதவன் மற்றும் பிரசன்னா என்பது தெரியவந்தது. இது அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக தலைமறைவான இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
இடப்பிரச்சினை மற்றும் டீக்கடையில் ஓசிக்கு சிகரெட் கேட்டு அதனால் ஏற்பட்ட தகராறிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.