சென்னை: தமிழகத்தில் உள்ள 80 பொறியியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு இல்லாத காரணத்தால், அந்த கல்வி நிறுவனம் இயங்க அண்ணா பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 430 பொறியியல் கல்லூரிகளில் 1.57 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3,100 பொறியியல் இடங்கள் கூடுதலாக உள்ளன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க 1,78,959 பேர் விண்ணப்பித்துள்ளனர். காலியிடங்கள் இல்லாத அளவிற்கு அனைத்து இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நடப்பாண்டில், ECE Advanced Technology, ECE Design and Technology ஆகிய 2 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடந்த மே 15 முதல் ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் 6ம் தேதி வெளியான நிலையில், கடந்த மாதம் 26ஆம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், பி.இ., பி டெக் படிப்பிற்காக பொறியியல் கலந்தாய்வு வரும் 22ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சிறப்பு பிரிவுக்கு 2 கட்டங்கள், பொது பிரிவிற்கு 3 கட்டங்கள் என மொத்தம் 5 கட்டங்களாக பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 28ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 2வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 9ந்தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 3வது கட்ட கலந்தாய்வு, ஆகஸ்டு 22 முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பொறியியல் கலந்தாய்வு முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கலந்தாய்வில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த நிலையில், மொத்தமுள்ள 430 பொறியியல் கல்லூரிகளில் 80 பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. மேலும், உள்கட்டமைப்பு வசதி சரியில்லாத கல்லூரிகளில் உள்ள மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவும் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது.