ஒகனேக்கல்: கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை 11மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 7ஆயிரம் கனநீர் வினாடிக்கு வந்துகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால், காவிரியில் தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு கோரிக்கை விடுத்தது. ஆனால், தண்ணீர் திறக்க முடியாது அம்மாநில துணை முதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார் முரண்டு பிடித்தார். பின்னர், இது தொடர்பாக, மத்தியஅமைச்சர் மற்றும் காவிரி ஆணையத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதையடுத்து, மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு கூறியது.
இந்த நிலையில், கர்நாடகா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. இதனால், அங்குள்ள கபினி, கிருஷ்ணசாகர் நீர்த்தேக்கங்களுக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதையடுத்து, காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் அளவு தற்போது அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை 6மணி நிலவரப்படி காவிரியில் வரும் தண்ணீர், ஒகேனக்கலுக்கு 5100 கன அடியாக இருந்தது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று முற்பகல் 11மணி அளவில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 7,000 கன அடியாக அதிகரித்து. இது மேலும் அதிகரிக்கும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
காவிரியில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் நேற்று காலை 29 ஆயிரத்து 552 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் மாலையில் 44 ஆயிரத்து 436 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. தற்போது மேலும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 5,452 கன அடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டுள்ளது.