டெல்லி: மத்திய பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் அலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தலைநகர் வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய பாஜக அரசு, மக்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடந்த இரு மாதங்களாக மணிப்பூரில் நடைபெற்று வரும் இனக்கலவரம், அதைத் தொடர்ந்து வெளியான பெண்கள் நிர்வான ஊர்வலம் போன்றை நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முடககி வருகின்றன. மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 4 – வது நாளான இன்றும் இரு அவையின் அலுவல்களும் முடங்கி உள்ளன.
இந்த நிலையில், க எதிர்க்கட்சி கூட்டணி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம், காங்கிரஸ் தலைவர் கார்கே அறையில் இன்று காலை நடைபெற்றது. இதில் I.N.D.I.A கூட்டணியை சேர்ந்த 26 கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது மணிப்பூர் பிரச்னை, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டதுடன், மத்திய பாஜக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்தே தீரவேண்டும் என்பதால் இதுகுறித்து எதிர்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா, மணிப்பூர் விவகாரத்தில் அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும். எதிர்க்கட்சிகளை அழைத்து பாஜக அரசு பேச வேண்டும். இதற்கு முன் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரிடம் ஆலோசனை கூறுவோம். அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அந்த நடைமுறை தற்போது இல்லை” என அவர் தெரிவித்தார்