டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார் என மத்தியஅரசு கூறிய நிலையிலும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவைகளை முடக்கி வருகிறது. இன்று 4வது நாளாக அவை தொடங்கியதும், எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து சபாநாயகர் ஓம்.பிர்லா பார்லிமென்டில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3வது நாள் கூட்டத் தொடரில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார். ஆனால் எம்.பி.க்கள் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அறிக்கையை எதிர்பார்க்கிறோம் என கூறி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவையில் மதியம் 12மணிக்கு விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். ஆனால், அவை கூடியதும், மீண்டும் எதிர்க்கட்சியினரின் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில், இன்று 4வது நாள் கூட்டத்தொடர் காலை 11மணி அளவில் தொடங்கியது. அவை தொடங்கியதும், பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய மத்திய அமைச்சர் பியூர் கோயல், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த 177 நோட்டீஸ்கள் மீது விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது என்றும், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால், விவாதிக்க அரசு தயாராக உள்ளது என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலங்களவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டதால், மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, பார்லிமென்டில் அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவையை நடத்த ஒத்துழைப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தார்.
பார்லிமென்ட் கட்சி கூட்டம் குறித்து, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், “எதிர்க்கட்சிகளின் நடத்தை, வரும் ஆண்டுகளில் நிரந்தரமாக எதிர்க்கட்சியில் நீடிக்க விரும்புகிறது என்பதையே காட்டுகிறது என, கூட்டத்தில், பிரதமர் மோடி கூறினார். உலகம் நம்மை நம்புவது பெருமைக்குரியது. மூன்றாவது ஆட்சியில், மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருப்போம்,” என்றார
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ந்தேதி முதல் ஆகஸ்டு 11ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், மணிப்பூர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதால், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய ஜூலை 20ந்தேதி முதல் இன்று வரை எதிர்க்கட்சிகளால் முடக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.