பெங்களூரு: மத்திய, மாநில அரசுகளின் கடும் அழுத்தம் எதிரொலியாக,  கர்நாடக காங்கிரஸ் அரசு. கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந் துவிட்டுள்ளது.  தற்போதைய நிலையில்,  கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவு படி, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்வரான டி.கே. சிவகுமார்,   காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவோம், தண்ணீர் திறக்கமாட்டோம் என முரண்டு பிடித்து வந்தார்.  காவிரி தண்ணீர் தங்களுக்கே போதுமானதாக இல்லை என்றும் கர்நாடக அணைகளில் உபரியாக தண்ணீர் இருப்பின் அதை தமிழகத்துக்கு திறந்துவிடத் தயார் என்றும் கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  மத்திய, மாநில அரசுகளின் அழுத்தம் காரணமாக, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு தண்ணீர் திறந்து விட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு  12,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதனால்,  தமிழக பாசன பணிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நாள்களுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நடப்பாண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.  காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்கு மட்டுமே தண்ணீரைத் திறக்கும் அளவிற்கு மேட்டூர் அணையில் நீர் இருப்பு உள்ளது. இந்த சூழலில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.