சென்னை:
நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் படங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர்களிடம் இருந்து சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் படங்களை நீதிமன்றங்களில் வைக்க பலமுறை அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளது.

அரசியல் தலைவர்களின் உருவச் சிலைகள் அல்லது படங்கள் நிறுவப்பட்டால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சிலைகள் வைக்கக் கூடாது என உத்தரவிட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட ஆலந்தூர் நீதிமன்ற நுழைவுவாயிலில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை அகற்ற உத்தரவிட்டது.

நீதிமன்ற வளாகங்களில் அரசியல் தலைவர்களின் படங்களை வைக்க வேண்டாம் என உயர் நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியுள்ள போதும், அண்மையில் மீண்டும் இந்த பிரச்சனை எழுந்தது. வானூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் இருக்கைக்கு பின்புறம் மேல் பகுதியில் இருந்த அம்பேத்கர் புகைப்படம் அகப்பற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்மையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் படங்களை வைக்கவும் மற்ற தலைவர்களின் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதில் தேசத்தந்தை மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்களை மட்டுமே வைக்கலாம் எனவும், மற்ற படங்கள் எதையும் வைக்கக்கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களின் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலில் புகார் அளிக்கவும் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.