சென்னை: ரோஸ்கர் மேளா  திட்டத்தின் கீழ் மத்தியஅரசு பணிகளுக்கு தேர்வான 70 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன ஆணையை வழங்குகிறார்.

ரோஸ்கர் மேளா என்பது இந்தியா முழுவதும் மத்திய அரசு துறைகள் மற்றும் மாநில அரசு துறையில் உள்ள பல்வேறு காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப் பட்டு அதில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கும் நிகழ்ச்சியாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது .  வரும் 2030-ம் ஆண்டில் இந்தியாவில் குறைந்தபட்சம் 9 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம்  என்ற வகையில் மத்தியஅரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முன்னதாக மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்கள்  வேலைவாய்ப்பு தொடர்பாக  கடந்த ஜுன் மாதம் விரிவான ஆய்வு நடத்தினார். அப்போது பல்வேறு துறைகளில் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

இதன்படி கடந்த அக்டோபர் 22-ம் தேதி ரோஜ்கார் மேளாவை (வேலைவாய்ப்பு திருவிழாவை) பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் முதல்கட்டமாக 75,226 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை அவர் வழங்கினார். இதன்தொடர்ச்சியாக 70,000 பேருக்கு அரசு பணிக்கான ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக வழங்குகிறார்.

நாடு முழுவதும் 45 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் புதிய ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். நிதி ,தபால் துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்புத் துறை,  வருவாய்த்துறை , சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை,  அணுசக்தி துறை , ரயில்வே தணிக்கை மற்றும் கணக்கு துறை , உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணிகளுக்கான ஆணையை பிரதமர் வழங்க உள்ளார். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கான பயிற்சி வகுப்புகளையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

இதன்படி பல்வேறு அரசு துறைகளில் புதிய பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகள், பணியிட மரபுகள், நேர்மை, மனித வளகொள்கைகள் குறித்து பயிற்சியின்போது விரிவான விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.