மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பான வீடியோ நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ‘தி பரேட்’ என்ற பெயரில் நாகா பழங்குடியின பெண் கவிஞர் கவிதை ஒன்றை எழுதியுள்ளது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
மே 3 ம் தேதி மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே வன்முறை மூண்டதை அடுத்து துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் குக்கி பழங்குடியினரை மெய்தீய் இன தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கத் துவங்கினர்.
இதனைத் தொடர்ந்து மே 4ம் தேதி கங்கோபி மாவட்டத்தில் உள்ள பஹேனோம் கிராமத்துக்குள் நுழைந்த 1000க்கும் மேற்பட்ட மெய்தீய் தீவிரவாதிகள் சிறுபான்மையினரான குக்கி இனத்தைச் சேர்ந்தவர்களை தாக்கினர்.
தாக்குதலுக்கு பயந்து தப்பியோடிய அந்த கிராமத்தைச் சேர்ந்த இரண்டு குக்கி பழங்குடி இனப் பெண்களைப் பிடித்து நிர்வாணப்படுத்தி சாலையில் இழுத்துச் சென்ற அந்த கும்பல் அவர்களை மானபங்கப் படுத்தியதோடு மட்டுமல்லாமல் அருகில் இருந்த வயலுக்குள் தூக்கிச் சென்று வன்புணர்வு செய்தனர்.
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து 35 கி.மீ. அருகில் உள்ள கிராமத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ நேற்று வெளியானதை அடுத்து இது குறித்து வீடியோ-வில் பார்த்து தான் தெரிந்து கொண்டோம் என்று மத்திய மாநில அரசுகள் கூறிய நிலையில் இந்த ஒட்டுமொத்த வன்முறைக்கும் முக்கிய காரணம் என்று ஹுய்ரெம் ஹெரோடஸ் என்ற நபரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ள புதுடெல்லி-யில் வசிக்கும் நாகா பழங்குடியின பெண் கவிஞர் நிங்கிரிச்சோன் துங்ஷாங்னாவ், “காமம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றால், பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணியம் அழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களின் ஆன்மா தீண்டப்படாமல் உள்ளது” என்று தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.
‘தி பரேட்’
நீங்கள் அவர்களை நிர்வாணப்படுத்துங்கள்
அவர்களை இழுத்துச் செல்லுங்கள், அவர்களை புணருங்கள்
உங்கள் காம இச்சையுடன் மற்றும் வெறுப்புடன்
அது சதைக்கும் சதைக்கும் இடையேயானது
ஆனால் நீங்கள் போரில் வெற்றி பெறவில்லை
அவர்களின் ஆன்மாவை உங்களால் தொட முடியாது
என்று அந்த கவிதையில் பதிவிட்டிருக்கிறார், இந்த கவிதையை பாடலாகவும் இசையமைத்துள்ளனர்.