சென்னை: ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பொதுவாக இந்து சாஸ்திரத்தில் 3 அமாவாசைகள் மிகவும் விசேஷம் என சொல்லப்பட்டுள்ளது. அதாவத, உத்தராயன காலமான தை மாதத்தில் வருகிற தை அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற புரட்டாசி அமவாசை ஆகிய மூன்று.
ஆடி அமாவாசை நாளில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. இந்துக்கள் மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாக அமாவாசை தினத்தில் முக்கிய நீர் நிலைகளில் நீராடி திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த மாதம் இரு அமாவாசை வருவதால்,பலருக்கு இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் எந்த அமாவாசை நாளினை தர்ப்பணம் தர நாம் கடைபிடிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஆடி 1ஆம் தேதி (இன்று – ஜூலை 17ந்தேதி) ஒரு அமாவாசையும், ஆகஸ்டு 16 ஆம் தேதி அதாவது ஆடி-31ந்தேதி ஒரு அமாவாசையும் வருகிறது.
பஞ்சாங்க தகவலின் இரண்டு அமாவாசையுமே ஆடி அமாவாசைதான் என்றாலும், ஆகஸ்டு 16 ஆம் தேதி வரும் அமாவாசையே ஆடி மாதத்திற்கு உரிய சிறப்பு மிக்க அமாவை என்று கூறப்படுகிறது. அந்த நாளிலேயே முன்னோர்களுக்கு திதி வழங்குவது நல்லது. எனவே விரதம் இருப்பது, முன்னோர்களுக்கு திதி, தர்பணம் கொடுப்பது, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், தேவிபட்டிணம், புண்ணிய தலங்களில் புனித நீராட ஆடி- 31 புதன்கிழமையில் வரும் அமாவாசையே உகந்தது என சோதிட சாஸ்திர வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், பலர் ஆடி மாதத்தில் வரும் இந்த முதல் அமாவாசையையே புனித நாளாக கருதி தங்களது முன்னோர்களுக்கான கடமையை செய்து வருகின்றனர். இதையடுத்து, பல பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதுபோல, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். ‘
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே அக்னி தீர்த்தத்தில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்கள் நினைவாக திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்து வருகின்றனர். பின்னர், அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிய அவர்கள் பின்னர் அருள்மிகு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதிகளில் சாமி தரிசனம் செய்து திரும்பு கின்றனர்.
ஆடி அமாவாசை தினத்தினை முன்னிட்டு ராமநாத சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீராமர் தங்ககருட வாகனத்தில் அக்னி தீர்த்தத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தவாரி வழங்கினார்.