மிழ்நாடு தலைநிமிர அடித்தளம் அமைத்தவர் ‘கர்மவீரர்’ பெருந்தலைவர்  காமராஜர். அவரது 121வது பிறந்தநாளான இன்று, சமதர்ம சமுதாயத்தை கட்டமைக்க உறுதி யேற்போம்.

தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் தலைநிமிர வித்திட்டவர் கருப்புகாந்தி, தென்னாட்டு காந்தி என தமிழ்நாடு மக்களால் அன்போடு அழைக்கப்படும் பெருந்தலைவர்  காமராஜர். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.  இவர்  ஏழை பங்காளர் , படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம்  போற்றப்படுகிறார்.

தமிழ்நாட்டு மக்களின்  கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் திறந்த வாழ்க்கை வரலாற்றை பற்றி  இன்றைய தலைமுறையினர் முழுமையாக தெரிந்துகொள்ளாத நிலையில், அவற்றை இளையதலைமுறையினரும், மாணவச் செல்வங்களும்  தெரிந்து கொள்வதும், அறிந்து கொள்வதும் அவசியம்.

தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி நாட்டிற்காக பல நன்மைகளை செய்தவர் காமராஜர். இன்று மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியில் சிறந்து உள்ளது என்றால், அதற்கு அடித்தளம் போட்டவர் காமராஜார் என்பதை யாராலும் மறந்துவிட முடியாது, மறுக்கவும் முடியாது. வரலாற்று சிறப்புமிக்க அவரது சாதனைகளால் தான் இன்று தமிழ்நாட்டின் விவசாயமும், வேலைவாய்ப்பும் பிழைந்தோங்க காரணமாக உள்ளது. அதனால்தான் அவரது ஆட்சிக்காலம் தமிழ்நாட்டின் பொற்காலம் என போற்றப்படுகிறது.   

ஏழை எளிய மக்களின் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிகமாக பாடுபட்டவர் தென்னாட்டு காந்தி என்றழைக்கப்படும் காமராஜர்.   எளிய குடும்பத்தில் பிறந்தாலும் ஏற்றம் பல கண்டவர், காமராஜர் தான் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தந்தையை இழந்தார். அதன் காரணத்தால் வறுமையில் வாடிய குடும்பத்தை காப்பாற்ற  படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். தான் பெறாத கல்வியை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கில்,   நமக்கு கிடைக்காத கல்வி  அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நோக்கி செயல்பட்டவர்.   அவரது ஆட்சி காலத்தில், அவர் செய்த சாதனைகளில் கல்விக்காக  செய்த சாதனைகள் அதிகம். இவரை அனைவரும் கிங்மேக்கர், KINGMAKER என்று அழைக்கின்றனர். அரசியல் தந்திரங்களை நன்று அறிந்தவர். காமராஜரை இந்திய அரசியலின் குரு என்றும் காங்கிரசார் அழைக்கின்றனர்.

காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர், இவருடைய இயற்பெயர் காமாட்சி. விருதுநகர் மாவட்டத்தில் 1903-ம் ஆண்டு  ஜூலை மாதம் 15-ம் தேதி பிறந்தார். இவரின் பெற்றோர் பெயர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மையார.. சிவகாமி அம்மையார் இவரை ராஜா என்று அழைப்பார், பின்னர் இந்த பெயர் மருவி காமராஜர் என்றாயிற்று. இளம் வயதிலேயே தனது தந்தையை இழந்த காமராஜரால் பள்ளி படிப்பை தொடங்க முடியவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்ய ஆரம்பித்தார். வேலை செய்து கொண்டிருக்கும் போது பல தலைவர்களின் சொற்பொழிவுகளை கேட்டு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் வந்தது.

 சிறை வாழ்க்கை

அரசியலில் இருந்த ஆர்வத்தாலும்,  நாட்டுப்பற்றாலும் 1920-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தொண்டனாக சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு, சிறைதண்டனையும் பெற்ற காமராஜரின் அரசியல் குரு மூத்த சுதந்திரபோராட்ட தியாகி சத்தியமூர்த்தி. அவரது சொற்பொழிவையும் மேடைப்பேச்சையும் கேட்டு வளர்ந்தவர். அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கூட்டங்களில் கலந்துகொண்டார்.

1930-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற காந்தியடிகளின் (வேதாரண்யம்) உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டபோது காமராஜர்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு  2ஆண்டு சிறை தண்டனை கிடைக்கப்பட்டது. 1940-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு, 1942-ம் ஆண்டு நடந்த ஆகஸ்டுபுரட்சி போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டபோது மீண்டும் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  அதுமட்டுமில்லாமல் மேலும் 5 முறை சிறையில் அடைக்கப்பட்டார் அவர் மக்களுக்காக, சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டு,  8 வருடம் சிறை தண்டனை அனுபவித்தார். பல ஆண்டுக்காலம் சிறைச்சாலையிலேயே தன்னுடைய வாழ்க்கையைக் கழித்தவர்.

காங்கிரஸ் கட்சியில் காமராஜர் ஆற்றி வரும் அளப்பரியா பங்கினை கண்ட சுதந்திரபோராட்ட தியாகி சத்தியமூர்த்தி 1936ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரானபோது,  காமராஜரை காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்து, அவரது அரசியல் வாழ்க்கைக்கு அதிகாரப்பூர்வமாக அடித்தளமிட்டார். 1948ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார்.

அரசியல் வாழ்க்கை

பெருந்தலைவர் காமராஜரின் அரசியல், பண்பாடு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் போற்றி வந்த அரசியல் நாகரிகம், நட்புணர்வு, பழகுகின்ற எளிய தன்மை, இவையெல்லாம், அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. அவரது சுபாவம் மற்றும் நடவடிக்கை அவரோடு பழகியவர்களுக்குத்தான் அது நன்றாகத் தெரியும்.. இதுமட்டுமின்றி, கொண்ட கொள்கையில் உறுதியானவர், திடமானவர், தியாகச் சீலர் என்பது அவரது சாதனைகளை பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும்.

காமராஜரின் அரசியல் ஆற்றல், நிர்வாகத்தை திறமையை கவுரவிக்கும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி அவரை, 1940ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக அறிவித்தது.  தொடர்ந்து அவர் 14 வருடம் பதவி வகித்தார். 1952-ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று சென்னை மாநிலத்தின் முதலமைச்சரானார்.

தன்னை சந்திக்க வருவர்களை, அமருங்கள்,  மகிழ்ச்சி, நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசி அவர்களின் குறைகளை கேட்டறிந்த பெருந்தலைவர், நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில் பேசி அசத்துவர். காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.

முதலமைச்சர் காமராஜர்

படிக்காத மேதையாக இருந்தாலும் , காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு, மாநிலத்தின் முதலமைச்சராக  1953 ஏப்ரல் 14ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றார். முதலமைச்சராக பதவி ஏற்ற காமராஜர்,  அமைச்சர்களையும், அதிகாரிகளையும், மிக சிறப்பாக வழி நடத்தினார்.  தன்னுடன்  மேலும் 7 பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்து, மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி ஆட்சி செய்தார்.

இந்தியாவிலே மிகச்சிறிய அமைச்சரவை மூலம் செயற்கரிய ஆட்சி சாதனைகளை நிகழ்த்தியவர் காமராஜர் ஒருவரே. அறநிலையத்துறைக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த பரமேஸ்வரனை அமைச்சராக்கி அன்றே சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தார்.  இட ஒதுக்கீடு பிரச்னையில் இந்திய அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் செய்ய நேருவை இணங்கச் செய்ததும் காமராஜர் என்பதை மறைக்க முடியாது. 

காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பாபு ராஜேந்திரபிரசாத் சொல்லியதை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ்நாடு காமராஜரின் ஆட்சியில், ஆளுமை மிகசிறந்த மாநிலம் என்ற பெருமை பெற்றது. தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்டவர் கர்மவீரர் காமராஜர்.

காமராஜரின் கல்விப்பணி

தனது தலைமையின் கீழ், தமிழ்நாட்டில் 9ஆண்டு கால ஆட்சி செய்த காமராஜரின் ஆட்சி காலம், தமிழ்நாட்டின் பொற்காலமாக திகழ்ந்தது.  மாநிலத்தில் உள்ள கிராமங்கள் தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார்.  ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார்.

மாநிலத்தில், விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

காமராஜர் முதலமைச்சராக பதவியேற்றவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தையும், இலவச கல்வி, சீருடை திட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்தினார். மூடி இருந்த 6000 பள்ளிகளையும், 17,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் திறந்து வைத்தார். தனது, ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.இதனால் தான் இவரை எல்லோரும் அன்பாக கல்வி கண் திறந்தவர் காமராஜர் என்று அழைக்கின்றனர்.

வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, அடக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராஜர், தான் வாழ்ந்த 73ஆண்டுகளில் 57ஆண்டுகள் தமிழ்நாட்டு மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட  ஒப்பற்ற தலைவர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர்

1964ம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராஜர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரும், இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.  அப்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்ட காரணத்தால், அந்த குழப்பங்களை சரி செய்து, இந்தியாவின் இரண்டு முறை இந்தியாவின் பிரதமர்களை தேர்ந்தெடுக்க வழி செய்தவர் கருப்புகாந்தி காமராஜர்.

மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர், பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் ‘காமராசர் திட்டம்’ ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு.

இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர்.  அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். இவர் தமிழகத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவியில் இருந்த பெருமைக்குரியவர். இவர் நினைத்திருந்தால் இன்னும் பல முறை கூட முதலமைச்சராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் நாட்டின் வளர்ச்சி இளைஞர்களிடம் உள்ளது என்பதை உணர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அதே ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார். அதாவது, 1963 ல் காந்தி பிறந்த நாளில்  தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாரத ரத்னா காமராஜர்

அவரது மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்கி இந்திய அரசு கவுரப்படுத்தியது. மேலும், , நினைவு அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது. விருதுநகரில் காமராசர் வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசினால் அரசுடைமை யாக்கப்பட்டு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டு 20.08.1975 அன்று திறந்து வைக்கப்பட்டது.  மேலும், சென்னை தியாகராய நகரில் காமராசர் வாழ்ந்த இல்லம் 21.06.1978 அன்று முதல் நினைவு இல்லமாக மாற்றப்பட்டு, பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கன்னியாகுமரியில் 02.10.2000 அன்று காமராசர் மணி மண்டபமும், விருதுநகரில் 01.03.2006 அன்று பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு மணிமண்டபமும் கட்டப்பட்டு, அவரது சாதனைகளை பார்போற்றும் வகையில் திறந்து வைக்கப்பட்டது.

கல்வி வளர்ச்சி நாள்

இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், தமிழ்நாட்டு மக்கள் கல்வி வளர்ச்சி பெறவும் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு ஏராளமான சாதனைகளை செய்த, பெருந்தலைவர் காமராஜர்  பிறந்த நாளான ஜூலை 15 ஆம் நாளினை “கல்வி வளர்ச்சி நாளாக” தமிழகஅரசு  கொண்டாடி வருகிறது.

காமராஜர் ஆட்சியில் உருவான தொழிற்சாலைகள்  – அணைகள்

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நெய்வேலி நிலக்கரித் திட்டம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், கல்பாக்கம் அணு மின்நிலையம், ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை போன்ற எண்ணற்ற தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை பெருக்கினார்.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்து  தமிழ்நாடு விவசாயிகள்  ஏற்றம் பெறும் வகையில், பல்வேறு நீர்வள திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். மேட்டூர் கால்வாய்த்திட்டம், பவானி திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியவர்  கர்மவீரர்  காமராஜர்.

மூன்று முறை முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வசித்து, கதர் ஆடையை உடுத்திக்கொண்டு இருந்தார். காமராஜர் ஆட்சியின்போது கல்விக்காக அவர் போட்ட அடித்தளம்தான், தமிழ்நாடு தலைநிமிர காரணமாக அமைந்தது.  இதுமட்டுமின்றி, படிக்கும் குழந்தைகளுக்கு முதன்முதலாக மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்து, உலக நாடுகளுக்கே முன்னோடியாகவும் காமராஜர் திகழ்கிறார் என்பதை யாரும் மறுக்கவும் முடியாது, மறந்து  விடவும் முடியாது.

‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்னும் பொது வாழ்வின் இலக்கணத்தை கடைபிடித்து வந்த காமராஜரை போல வேறு ஒருவரை இதுவரை தமிழகம் கண்டதில்லை.  ஆனால், அவரது புகழையும், சாதனையையும், தங்களது சாதனை என பறைசாற்றிக்கொள்ளும் மன நிலைதான் இன்றைய அரசியல்வாதி களிடம் உள்ளது என்பதுதான் உண்மை. 

காமராஜர் பிறந்தநாளான இன்று (ஜூலை 15), அவரது சாதனைகளை இளைய தலைமுறையினரிடம்  கொண்டு சேர்ப்பதில் ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழனும் உறுதியேற்க வேண்டும்.

எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் வாழ்ந்த தியாக செம்மல் கர்மவீரர் காமராஜர் அவர்கள் அக்டோபர் மாதம் 2-ம் தேதி 1975-ம் ஆண்டு இவ்வுலகை விட்டு மறைந்தார். இவருடைய உடல் இப்பூமியை விட்டு மறைந்தாலும் இவருடைய புகழ் இந்த உலகை விட்டு மறையாது.

காமராஜர் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள் தொடர்பான புகைப்படங்கள் தொகுப்பு….