சென்னை: காமராஜர் பிறந்தநாளையொட்டி நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு முழு வேலைநாள் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 121வது பிறந்த நாள் நாளைய தினம் (ஜூலை 15ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பங்கேற்று காமராஜர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். சென்னை, பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு மலர்த்தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.
இந்த நிலையில், காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு நாளை பள்ளிகள் முழுநேரம் நடைபெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலைநாளாக இயங்கும் என கூறியுள்ளதுடன், காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.