சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காட்சி சட்டமன்ற தொகுதியில், மறு வாக்கு எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. அந்த பகுதிக்கு வந்த வழக்கறிஞர்களை காவல்துறையினர் சோதனை செய்ததால், சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தென்காசி சட்டமன்ற தொகுதியில், அதிமுக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் முடிவில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பழனி நாடார் சுமார் 370 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த விவகாரம் அப்போது சர்ச்சையானது.
இந்த வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, தென்காசி சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தபால் வாக்குகளை மீண்டும் எண்ண தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், தபால் வாக்கு எண்ணும் மையம் அருகே போலீசார்- வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு எற்பட்டது.
வாக்கு எண்ணும் மையம் அருகே அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வருகை தந்த வழக்கறிஞர்களை சோதனை செய்ததால் ஆத்திரம் அடைந்த வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.