சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை தமிழகத்தில் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்படுவதற்கான வழிகாட்டுதல் களை வருவாய்த் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர் தலைமையில் பட்டா முகாம்கள் நடத்தப்பட வேண்டும் எனவும், அங்கு, வீட்டுமனை பட்டாக்கள், பட்டா மாறுதல் ஆணைகள் பெற தகுதியான பயனாளிகளுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை செயலர்குமார் ஜெயந்த் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாகொண்டாட்டங்கள் இந்தாண்டு ஜூன் மாதம் முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
குறிப்பாக வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்தமாக குடியிருப்பு வசதியை உறுதிசெய்யும் நோக்கில் வருவாய்த் துறை மூலம் தகுதியான பயனாளிகளுக்கு விதிமுறை களைப் பின்பற்றி வீட்டுமனை பட்டாக்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
நத்தம் புறம்போக்கு நிலங்களை பொறுத்தவரை, கிராம நத்தமாக ஒதுக்கப்பட்ட நிலங்களில் இருந்து தகுதியான வீடற்ற ஏழைகளுக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. நத்தம் புறம்போக்கு நிலங்கள் போதிய அளவு இல்லாவிட்டால், பிற ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களைத் தேர்வு செய்து, கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அதிகாரத்துக்குட்பட்டு நத்தமாக வகைப்பாடு மாற்றம் செய்தும் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையால் ஏற்கெனவே கடந்த காலங்களில் நில எடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் பயனாளிகளுக்கு இணையவழியில் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, பாதுகாக்கப்பட்ட வனங்களில் நீண்டகாலமாக குடியிருந்து வேளாண்மை செய்யும் மலைவாழ் மக்கள், பழங்குடியினருக்கு அவர்கள் வசிக்கும், வேளாண்மை செய்து வரும் இடத்துக்கான நில உரிமை பட்டாக்களும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது.
வழிகாட்டுதல்கள்: மாவட்டம்தோறும் அரசால் வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் சிறப்பு பட்டா முகாம்களை துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள் தலைமையில் நடத்தவேண்டும். பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் பட்டாக்கள், மாறுதல் ஆணைகள் தகுதியான பயனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை பெற்று, இணையவழியில் பதிவு செய்து தகுதியான மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பட்டா மாற்ற ஆணைகள் இணைய வழியில் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் பல்வேறு வருவாய்த் துறை ஆவணங்களில் உள்ள பிழைகளையும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்று அவற்றின் மீது விசாரணை நடத்தி உடனுக்குடன் இறுதி ஆணைகள் பிறப்பிக்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு முகாம்களில் பெறப்படும் வருவாய்த் துறை தொடர்பான இதர மனுக்கள் மற்றும் இதர துறைகள் சார்ந்த மனுக்களை உரிய அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு பெற வேண்டும். இந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.