டெல்லி: ஜம்மு காஷமீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மத்தியஅரசு நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அதன்மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை எடுத்தது. இதைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவை அனைத்தும், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றபட்டது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் சஞ்சய் கிஷன், சஞ்ஜீவ் கண்ணா, கவுல் பி.ஆர். கவாய், சுர்ய காந்த் ஆகிய நீதிபகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அரசியல் சாசன பெஞ்ச் சுமார் மூன்று வருடங்கள் கழித்து இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. ஜம்மு காஷமீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லுமா?, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது செல்லுமா என்பது தொடர்பாக இன்று விசாரணை நடத்த உள்ளது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள், எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்வது போன்ற நடைமுறைகளை தாக்கல் செய்ய அறிவுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு ஏற்கனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ”கடந்த முப்பது வருடங்களாக ஜம்மு-காஷ்மர் பயங்கரவாத தாக்கத்தை எதிர்கொண்டு வந்தது. தற்போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் 370 சிறப்பு சட்டப் பிரிவை ரத்து செய்ததுதான். காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் வழக்கமான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. தொழில் முன்னேற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இதுதொடர்பான வழக்கை, கடந்த 2020ம் ஆண்டு, வெவ்வேறு ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. அப்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அதை மாற்ற மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.