தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் செயல்பாடுகள் தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக அமைந்துள்ளது குறித்தும், அரசியலமைப்புச் சட்ட மீறல்கள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடித்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர், அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்படவில்லை என்றும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட மசோதாக்கள் நிலுவை, முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒப்புதல் அளிக்காதது உள்ளிட்ட ஆளுநரின் செயல்பாடுகளும் கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சரின் புகார் கடிதம் விவரம் வருமாறு:- சட்டப்பேரவையில் இயற்றி அனுப்பி வைக்கப்பட்ட பல முக்கியமான சட்டமுடிவுகளுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் தேவையற்ற காலதாமதம் ஏற்படுத்தி வருகிறார். இது மாநில நிர்வாகத்தில் தலையிடுவதற்கும் பேரவை அலுவல்களில் தலையிடுவதற்கும் ஒப்பானது. அரசியலமைப்புக்கு முரணானது.
சென்னை ஐகோர்ட்டு விசாரணைக்கு உத்தரவிட்ட குட்கா வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடுக்க சி.பி.ஐ. கோரிய அனுமதியைக்கூட வழங்காமல், கவர்னர் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை கவர்னர் அடிக்கடி தனது பிளவுபடுத்தும் பேச்சுகளின் மூலம் பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகிறார்.
அவரின் இதுபோன்ற செயல்கள், இந்திய அரசமைப்பின் 156 (1)-வது பிரிவின்கீழ், அரசியலமைப்பை நிலை நிறுத்துவதற்கும், இணங்குவதற்கும் தான் ஏற்றுக்கொண்ட உறுதி மொழியை மீறியுள்ளதையே காட்டுகிறது.
தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும் ‘தமிழ்நாடு’ என்ற பெயரை, ‘தமிழகம்’ என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று ஏற்க இயலாத கருத்தை கவர்னர் தெரிவித்தார்.
9.1.2023-ல் சட்டப்பேரவையில் கவர்னர் உரையாற்றும்போது, தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றிருந்த சமூகநீதி, சுயமரியாதை, அனைவருக்குமான வளா்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், மனித நேயம் மற்றும் திராவிட மாடல் ஆட்சி போன்ற சொற்களை வாசிக்காமல் புறக்கணித்தார். இதன் மூலம், மாநிலத்தின் மற்றும் அரசின் நெறிமுறைகளை கவர்னர் பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கினார்.
பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களை கவர்னர் குறிப்பிடாதது தமிழகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிப்பதாகும்.
தமிழகத்தின் வளா்ச்சிக்காக முதலீடுகளை ஈா்க்க கிழக்காசிய நாடுகளுக்கு முதல்வர் பயணம் மேற்கொண்டிருந்தபோது, வெளிநாட்டுப் பயணங்களால் முதலீடுகள் வருவதில்லை என்று கவர்னர் குறிப்பிட்டார். இது கண்ணியமான கவர்னர் பதவிக்கு அழகல்ல.
அமைச்சா் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறைகளை வேறு இரண்டு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்ய விரும்புவதாகவும், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தக்க வைக்க விரும்புவதாகவும் ஜூன் 15-ல் கவர்னருக்கு கடிதம் எழுதினேன். இலாகா மாற்றத்தை ஏற்றுக்கொண்டு கவர்னர் ஜூன் 16-ல் எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டு, இலாகா இல்லாத அமைச்சராக தொடா்வார் என்று எனது பரிந்துரையை ஏற்க மறுப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்.
இது அமைச்சா்கள் நியமன விவகாரத்தில் 164(1) பிரிவுக்கு முரணாக கவர்னர் செயல்படுகிறார் என்பதையே காட்டுகிறது. சிதம்பரம் நடராஜா் கோவிலில் நடைபெற்ற குழந்தைத் திருமண வழக்கில் தவறான தகவல்களை கவர்னர் தெரிவித்தார். மேலும், ஜூலை 29-ந் தேதி இரவு 7.45 மணியளவில் இந்திய அரசியலமைப்பின் 154, 163 மற்றும் 164-வது பிரிவுகளை மேற்கோள் காட்டி, அமைச்சா் வி.செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கியதாக கவர்னர் குறிப்பிட்டார். திடீரென இரவு 11.45 மணியளவில் அதை நிறுத்திவைக்கும் மற்றொரு கடிதத்தையும் வெளி யிட்டார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் கவர்னர் பதவியை அவா் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை முர்மு படித்து பார்த்து விட்டு அந்த கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைப்பார் என தெரிகிறது.
இதற்கிடையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது டெல்லியுல் முகாமிட்டு உள்ளார். அங்கு, முதலமைச்சர் கடிதம் தொடர்பாக உள்துறையில் தனது கருத்தை தெரிவிப்பார் என்றும், உள்துறை அமித்ஷாவை சந்தித்து தமிழக நிலவரம் குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]