சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் செப்டம்பர் 15க்குள் முழுமையாக முடிவடையும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உறுதி தெரிவித்து உள்ளார்.
மழைக்காலத்தின்போது வெள்ளத்தில் மிதக்கும் சென்னையை சரிசெய்ய திமுக ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் 300 கோடி மதிப்பில் சென்னையில் புதிதாக மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி. மீ நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முக்கிய பகுதிகளில் மட்டும் ஒராண்டுக்குள் பணிகள் முடிவடைந்த நிலையில், புறநகர் பகுதிகள் மற்றும் வடசென்னையின் பல பகுதிகளில் இன்னும் மழைநீர் வடிகால் பணி முற்றுப்பெறாமல் உள்ளது. இதனால், வரும் அக்டோபர் மழைக்காலத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இநத் நிலையில், செப்டம்பர் 15க்குள் மழைநீர் வடிகால் பணிகள் முழுதாக முடிவடையும் என சென்னை மேயர் பிரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மாநகராட்சி மேயர் பிரியா அதிகாரிகளுடன் சென்று மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் பணிகள் முழுவீசச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை வரும் செப்டம்பர் 15க்குள் முழுதாக முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே போல தூர்வாரும் பணிகளும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு அதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன என்றார்.
மேலும், சென்னையில் மிகவும் சேதமடைந்த 46 அரசு பள்ளிகள் கண்டறியப்பட்டு அவற்றை புதியதாக சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் பள்ளிகளை சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.