சென்னை
பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த பணம் குடும்பத் தலைவிகளுக்கு எப்போது கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன.
க்டந்த சட்டசபை கூட்டத்தொடரில். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று அவர் விரிவான ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இக்கூட்டத்தில் குடும்பத் தலைவிகளில் யார்-யாருக்கு ரூ.1000 வழங்க முடியும் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த உள்ளார்.
கூட்டத்தில் அனைத்து ஆட்சியர்களும் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வட்டாட்சியர்கள், ஆர்.டி.ஓ.க்கள்-காவல்துறை சூப்பிரண்டுகள், மாநகராட்சி, நகராட்சி, ஆணையர்கள், கூடுதல் ஆட்சியர்கள், காணொலி வாயிலாகக் கூட்ட அரங்கில் அமர்ந்து முதல்வர் பேசுவதைக் கவனிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.