சென்னை:  மாநில தலைநகர் சென்னையின் அனைத்து மண்டலங்களைச் சேர்ந்த  78 சார்பதிவாளர்களை தமிழ்நாடு அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.  ஏற்கனவே 36 மாவட்ட பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதே அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை  ஏற்படுத்திய நிலையில்,  78 சார்பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு  அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களின் சார்பதிவாளர்கள் மொத்தம் 78 சார்பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசுத்துறை செயலர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் சார் பதிவாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்கள் தரப்பில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அரசுத்துறை செயலர் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டாலும் அண்மையில் சென்னை மற்றும் திருச்சியில் சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனையை அடுத்து தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.