தென்காசி

திக அளவில் தண்ணீர் வருவதால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளதால் இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. காவல்துறையினர் நேற்று முன்தினம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

ஆனால் நேற்று காலையில் ஐந்தருவியில் நீர்வரத்து குறைந்ததால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பிறகு பகல் 11 மணிக்கு மெயின் அருவியிலும் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அங்கும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நேற்று இரவு குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆகவே பாதுகாப்பு கருதி அந்த 3 அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க காவல்துறையினர் தடை விதித்தனர்.

இன்றும் குற்றாலம் மெயினருவி, ஐந்தருவியில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரமாகக் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தற்போது குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ச் வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டுகிறது. தவிர அனைத்து அருவி பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.