டில்லி
தனது தோல்வியை விளம்பரங்கள் மூலம் பாஜக மறைக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஒரு டிவீட் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்,
“மோடி அரசின் கொள்ளையினால் பணவீக்கம் மற்றும் வேலையின்மை இரண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் பா.ஜ.க.வினர் அதிகார பேராசையில் மூழ்கியுள்ளனர். நாட்டில் வேலையின்மை விகிதம் 8.45 சதவீதமாக உயர்ந்துள்ளது. கிராமங்களில் வேலையின்மை விகிதம் 8.73 சதவீதமாக உள்ளது.
மேலும் கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான தேவை உச்சத்தில் உள்ளது, ஆனால் வேலை இல்லை. கிராமப்புற ஊதிய விகிதம் குறைந்துள்ளது. காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நரேந்திர மோடி தேர்தலுக்கு முன், ‘அச்சே தின்’, ‘அமிர்த கால்’ போன்ற முழக்கங்களை முன்வைத்து, தங்கள் கட்சியின் தோல்விகளை விளம்பரங்களின் உதவியுடன் மறைத்துவிடப் பார்க்கிறார் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும்.
ஆனால் இம்முறை அது நடக்காது, பொதுமக்கள் விழிப்புணர்வுடன், பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்து அவர்களின் வெற்று முழக்கங்களுக்குப் பதிலளிப்பார்கள். பொதுமக்கள் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்றுவார்கள்”
என்று பதிந்துள்ளார்.