ஐதராபாத்
தெலுங்கானாவில் பாஜக சட்டமன்ற உறுப்பினரான ரகுநந்தன் பாஜகவுக்கு எதிராகப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கானாவின் டுப்பாக் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் ரகுநந்தன் ராவ் வெற்றி பெற்றார். ஆளும் கட்சியான டி ஆர் எஸ் கட்சியின் வேட்பாளருடன் அவர் சரிசமமாக வாக்குகள் பெற்று மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற போதிலும் பாஜகவுக்கு இது மிகவும் உற்சாகம் அளித்தது.
மேலும் ரகுநந்தன் ராவ் வெற்றி மூலம் தெலுங்கானாவில் பாஜக வளர்ச்சி அடைந்து ஆட்சியை பிடிக்கும் என அப்போது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக ரகுநந்தன் ராவ் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருந்துள்ளார். இது தற்போது பெரிதாக வெடித்துள்ளதால் தெலுங்கானா பாஜகவில் பிளவு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
ரகுநந்தன் சமீபத்தில்,
“உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பாஜகவினர் அரசியல் சாணக்கியர் என புகழ்கின்றனர். ஆனால் முனுகோடே இடைத் தேர்தலின் போது அவருடைய பிரசாரத்தின் மூலம் அவர் சாணக்கியர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது. அந்த தொகுதியில் பாஜக ரூ.100 கோடி செலவு செய்தும் வெற்றி பெறவில்லை
தெலுங்கானாவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தளத் தலைவர் தேர்வு பற்றிக் கூட ஏதும் தெரியாதவராக பாஜக செயல் தலைவர் நட்டா உள்ளார். இது தளத் தலைவர் தேர்வு குறித்து நான் விவாதித்த போது தெரிய வந்தது. இவரைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்?
நான் எனது தொகுதியில் வெற்றி பெற்றது எனது சொந்த உழைப்பால் தானே தவிர பாஜகவால் இல்லை. எனது வெற்றியில் பாஜகவின் பங்களிப்பு ஏதுமில்லை. மக்களின் ஆதரவால் நான் வெற்றி பெற்றேன். எனது வெற்றி பாஜகவின் சின்னத்தினால் அல்ல.”
என தெரிவித்த தகவல் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.
இதன் மூலம் தெலுங்கானா பாஜகவில் பிளவு என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
[youtube-feed feed=1]