டெல்லி: காவிரி மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு எதிராக, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்கிறார்.
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசு தமிழ்நாட்டுக்கு எதிரான மனநிலையில் செயல்பட்டு வருகிறது. கர்நாடக மாநில துணைமுதல்வரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், தமிழகத்துக்கு எதிரான மனநிலையில், பேசி வருகிறார். மேலும் காவிரியில் முறையான தண்ணீர் திறக்கவும் மறுத்து வருகிறார்.
இந்த நிலையில், காவிரி நதியில் இருந்து இந்த மாதம் (ஜூலை) கூடுதல் தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கடந்த மாதம் குறைவாக தண்ணீர் திறக்கப்பட்டது குறித்து ஆலோசிக்கவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மாலை டெல்லி புறப்பட்டார். அவர் இன்று டெல்லியில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து பேசுகிறார். அப்போது காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு அறிவுரை கூறவும், மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தவும் உள்ளார்.
தொடர்ந்து, டெல்லியில், காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பாய அதிகாரிகளை நேரில் சந்தித்து காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவாகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநில அரசு, கடந்த ஜூன் மாதம் 9 டிஎம்சி தண்ணீர் தரவேண்டிய நிலையில் 2.8 டிஎம்சி தண்ணீர் தான் திறந்துவிட்டது. மீதமுள்ள தண்ணீர் வரவில்லை. இதனால் மேட்டூர் அணையில் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் உடனே தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக்கோரி அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் முகாமிட்டு உள்ளார்.