மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. கேதர் நாத் சுக்லாவின் உதவியாளர் பிரவேஷ் சுக்லா பழங்குடி இன இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
பாஜக பிரமுகரின் இந்த மனிதாபிமானமற்ற செயல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து பிரவேஷ் சுக்லா மீது பொது இடத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்வது (இ.த.ச. 294) மற்றும் பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவிப்பது (இ.த.ச. 504) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.சி. / எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நபர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பொது சிவில் சட்டம், பழங்குடியினர் பாதுகாப்பு மற்றும் பழங்குடியினத்தவரை எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் ஜனாதிபதிகளாக உயர்த்தி அழகுபார்ப்பதாக பாஜக மார்தட்டி கொள்ளும் அதேவேளையில் பாஜக ஆளும் மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீதான இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்துள்ள ம.பி. காவல்துறை அவரை கைது செய்ய தேடிவருவதாகக் கூறப்படுகிறது.