கோவையில் 9000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என்று தமிழக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்தது.
சத்தியமங்கலம் சாலை மற்றும் அவிநாசி சாலை ஆகிய இரண்டு வழித்தடங்களில் 32 ஸ்டேஷன்களுடன் 39 கி.மீ. தூரம் அமையவிருக்கும் இந்த மெட்ரோ ரயில் வழித்தடம் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனரும் முதன்மைச் செயலாளருமான எம்.ஏ. சித்திக் நேற்று கோவையில் ஆய்வு செய்தார்.
அவிநாசி சாலை வழித்தடம் உக்கடம் முதல் நீலாம்பூர் வரையில் 17 ரயில்நிலையங்கள் தவிர கோவை விமான நிலைய ரயில் நிலையம் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும்.
இந்த வழித்தடத்தில் உயர்மட்ட பாதை அமைக்கப்படும் என்றும் அவிநாசி சாலையில் தற்போது உள்ள மேம்பாலத்துக்கு இணையாக அதன் இடதுபுறத்தில் சுமார் 13 முதல் 20 மீட்டர் உயரத்தில் வழித்தடம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் சாலை வழித்தடம் கோவை ரயில்நிலைய சந்திப்பு முதல் வளியம்பாளையம் வரை 14 ரயில் நிறுத்தங்களை கொண்டிருக்கும் என்றும் கோவை ரயில் நிலைய சந்திப்பில் இவ்விரு வழித்தடமும் சந்திக்கும் வகையில் இரண்டு அடுக்கு வழித்தடம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலாம்பூரில் அமையவிருக்கும் ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் வரை பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த சி.எம்.ஆர்.எல். நிர்வாக இயக்குனர் எம்.ஏ. சித்திக், இந்த திட்டத்திற்காக 38 முதல் 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் பட உள்ளதாகவும், தவிர பணிமனைக்காக சுமார் 35 ஏக்கர் தேவைப்படுவதாகவும் கூறினார்.
இன்னும் 1 அல்லது 1.5 ஆண்டுகளில் இந்த திட்ட பணிகள் துவங்கும் என்றும் திட்ட பணிகள் துவங்கிய 3.5 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் மூன்று பெட்டிகளை கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என்றும் பயன்பாட்டுக்கு ஏற்ப இதன் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்த அவர் மத்திய அரசின் ஒப்புதலை தொடர்ந்து சர்வதேச நிதியுதவியுடன் மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.