சென்னை
தமிழக ஆளுந்ர் ஆர் என் ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்
”தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அந்த கடிதத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டிருக்கிறார்.
ஆளுநர் குறிப்பிட்டு இருக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் வானளாவிய அதிகாரம் எதுவும் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் சட்டப் பிரிவுகளை துணைக்கு அழைத்து, தன்னிச்சையாக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தமக்கு இருப்பதாகக் கடிதம் எழுதி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. முதல்வரின் பரிந்துரையின்றி ஆளுநர் எப்படி ஒரு அமைச்சரை நியமிக்க முடியாதோ அதைப்போலவே தன்னிச்சையாக நீக்கவும் முடியாது என்பது தெளிவாகிறது.
எனவே அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளையும் மரபுகளையும் தொடர்ந்து மீறிவரும் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் ஆளுநராக பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். தமிழகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்க முனைந்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்.
என்று கூறப்பட்டுள்ளது.