சென்னை
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.50 ஆகக் குறைந்துள்ளது.
திடீரென தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் தக்காளியைக் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறது. இங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பொதுமக்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இந்நிலையில் இன்று சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து (மொத்த விலை) ரூ.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள: உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது எனத் தெரிவித்தனர்.
தற்போது சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் வந்த தக்காளி, இன்று 700 டன் வந்துள்ளது. இனி வரும் நாட்களில் 1200 டன் வரை தக்காளி வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வந்தால் இன்னும் விலை குறைவு ஏற்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.