திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் வீட்டில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மீது பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக இருந்தபோதும் மகேஸ்வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், கொரோனா காலகட்டத்தில் லைசால் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை நாகராஜ் தலைமையிலான போலீசார், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரிந்த துப்புரவு ஆய்வாளர்கள் 3 பேரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.