கம்பாலா
தீவிரவாதிகள் தாக்குதலால் உகண்டாவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ள்னர்.

கடந்த 1962 வரை கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள உகாண்டா, ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை அடைந்தது. ஆயினும் சர்வாதிகாரம், தீவிரவாத குழுக்களால் உகாண்டாவில் இன்றளவும் அசாதாரண சூழல் நிலவுகிறது. இங்குள்ள மேற்கு உகாண்டா பகுதியில் ஏடிஎப் என்ற தீவிரவாத குழு செயல்படுகிறது.
இந்த தீவிரவாதக்குழு ஐஎஸ்ஐஎஸ் ஆதரவுடன் செயல்பட்டு அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. நேற்று முன் தினம் இரவு உகாண்டாவின் பாண்ட்வோ நகரில் உள்ள பள்ளி விடுதியின் மீது ஏடிஎப் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ஒவ்வொரு அறையாகச் சென்ற சுமார் 25 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.
இதில் மாணவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்து 8 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் அண்டை நாடான காங்கோவுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து உகாண்டா பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ், “இங்கு தீவிரவாதிகளின் தாக்குதலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 38 பேர் மாணவர்கள். தவிர 6 பேரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
உகாண்டா அரசு தரப்பில், “கடந்த 2013 முதல் இதுவரை ஏடிஎப் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 6,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த அமைப்பில் சுமார் 500 தீவிரவாதிகள் வரை இருக்கக்கூடும். அண்டை நாடான காங்கோவில் முகாமிட்டுள்ள அவர்கள் அடிக்கடி உகாண்டாவுக்குள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளன.
[youtube-feed feed=1]